மணி அப்துல் கரிம்[1][2]

[1] Researcher, 7d Phytoneural Research Lab, Coimbatore, Tamil Nadu, India. http://7dresearchlab.com/

[2] Research Scholar, Department of Psychology, Periyar University, Tamil Nadu, India. [email protected]

இந்திய ஒன்றியத்தில் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றில், மிகவும் தொன்மையானவற்றில் ஒன்று தென்னிந்தியாவில் வளர்ந்த சித்த மருத்துவமுறையாகும், மற்றொன்று வடக்கில் நிலவிய ஆயுர்வேத முறை. “சித்த மருத்துவமுறை” என்பது திராவிட கலாச்சாரத்தின் பங்களிப்பாகும், இது உலகின் பழமையான கலாச்சாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சித்த மருத்துவமுறை மிகவும் தொன்மையானது என்பதை உறுதி செய்யும் விதமாக பழந்தமிழ் இலக்கியங்களான திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களில் இந்த முறை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

“சித்த மருத்துவம்” என்பது நேர்மறை ஆரோக்கியத்தின் அறிவியலாக கருதப்படுகிறது. உடலிலும் மனதிலும் முழுமைபெற்று அதன் மூலம் அழியாமையைப் பெறவும் மூலிகைகளோடு சேர்த்து உணவுக் கட்டுப்பாடு, உடலுழைப்புச் செயல்கள் மற்றும் ஓய்வெடுப்பதன் மூலம் நோயைத் தடுப்பதே சித்த மருத்துவத்தின் தலையாய நோக்கமாகும். இம் மருத்துவ முறையை தோற்றுவித்த முன்னோடிகளை “சித்தர்கள்” என அழைக்கப்படுகிறது.

சித்தர்கள் தங்களின் ஆயுட்காலத்தை நீட்டித்துக்கொள்வதற்கும் (காயகல்பம்), தங்களை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்வதற்கும், தங்களின் உடலிலும்-மனதிலும் நோய்களை அண்டவிடாமல் செய்வதற்கும், அடர்ந்த காடுகளில் பலகாலங்கள் செலவிட்டு அறிய மூலிகைகளையும், மருந்துகள் தயாரிப்பதிலும் தேர்ந்த அறிவையும், ஞானத்தையும் பெற்று தங்களுக்கும், மக்களுக்கும் மருத்துவம் செய்தனர். சித்த மருத்துவமுறையில் மூலிகைகளை தனிப்பொடியாகவும், பல மூலிகைகளை சேர்த்து சூரணமாகவும், லேகியம், பஸ்பம், செந்தூரம், நெய், எண்ணெய், மாத்திரை, எனப் பல்வேறு முறைகளில் நோய்களின் தன்மைக்கு ஏற்ப சித்த மருந்துகளை தயாரித்து வழங்கியுள்ளனர். மேலும், யோகா மற்றும் தியானத்தில் அதீத ஆர்வம் கொண்டு அவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் சித்தர்கள் விளங்கினர். மனநலப் பிரச்சனைகள் மற்றும் அவற்றின் சிகிச்சை குறித்து அகத்திய சித்தர் எழுதிய நூல்களில் ஒன்று “மணிதக்கிருகை நூல் – 64”.

கிரிகை மருத்துவம்

சித்த மருத்துவத்தில் உள்ள மனநல மருத்துவத்தை “கிரிகை மருத்துவம்” என அழைப்பதுண்டு. அகஸ்தியர், யூகிமுனி, மற்றும் தேரையர் போன்ற பல சித்தர்களால் சித்த மனநல மருத்துவத்தை முன்வைக்கப்படுகிறது. அவர்களின் விளக்கங்கள் தனித்தன்மை வாய்ந்ததாகவும், குறிப்பாக மனநல பாதிப்புள்ளவர்கள் “அழல்” மேலாதிக்கம் கொண்டவர்களாக இருப்பர் என கூறியுள்ளனர். பருவகால மாறுபாடு, உணவுப் பழக்கவழக்கங்கள், வயது மற்றும் தனிநபர்களின் பாலினம் போன்ற பலமாறுபாடுகளால் மனநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை சித்தர்கள் அங்கீகரித்துள்ளனர்.

அகஸ்தியர் தனது “அகஸ்தியர் கனகமணி நூலில்” மனநோய்க்கான காரணவியல் காரணிகளின் குறிப்பிடத்தக்க விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் காரணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன: 1) அதிகப்படியான கோபம், 2) பாலியல் வக்கிரம், 3) குற்ற உணர்வு, 4) புண்படுத்தும் வாசனை மற்றும் தகனத்தினால் உண்டாகும் புகை, 5) தூக்கமின்மை, 6) மோதல் குணம், 7) கிளர்ச்சி மனப்பான்மை, 8) கவலை, 9) கொள்ளையினால் திடீர் செல்வ இழப்பு, 10) எதிரி பயம், 11) அலைவதினால் ஏற்படும் சோர்வு, 12) நச்சுப் பொருட்கள், 13) நாட்பட்ட துன்பம், 14) மரணம், 15) கஞ்சா மற்றும் அபின் போன்ற போதைப்பொருள் துஷ்பிரயோகம், 16) குற்றஞ்சாட்டத்தக்க செயல்பாடுகளில் ஈடுபடுவது, 17) உயர் அதிகாரிகளுக்கு பயம், மற்றும் 18) தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்.

மனச்சோர்வு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்:

சீந்தில், அதிமதுரம், ஏலம், கிராம்பு, சாதிக்காய், தளிசாபத்திரி, இலவங்கப்பட்டை, கருஞ்சீரகம், தூதுவளை, போன்ற மூலிகைகளை பொடியாக்கி, சர்க்கரை மற்றும் பாலில் சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது தேவையான அளவு தேன் மற்றும் நெய் சேர்த்து லேகியமாக உட்கொள்ளலாம்.

ஞாபக திறன் மேம்பட பயன்படுத்தும் மூலிகைகள்:

நினைவாற்றல் மேம்பாட்டிற்கு சீந்தில், நாயுருவி, வாய்விளங்கம், கோஷ்டம், தண்ணீர்விட்டான் கிழங்கு, வசம்பு, சங்கங்குப்பி, போன்ற மூலிகைகளைப் பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் சில நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சித்தர்களால் மனநோயைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை பல்வேறு நூல்களின் மூலம் நமக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக, வலிப்பு நோய்களின் வகைப்பாடு, அறிகுறிகளிலின் மூலம் பல்வேறு மனநோய்களை புரிந்து கொள்ளப்படுகிறது, அவைகள்: நாள்பட்ட மனச்சிதைவு நோய், கேடடோனிக் பிரிவு மனச்சிதைவு, பித்து, ஹிஸ்டீரியா, மற்றும் மனச்சோர்வு நோய் ஆகியவையாகும். மனநோய்களுக்கான காரணங்களும் சிகிச்சைகளும் சித்த நூல்களில் பாடல் வடிவுகளிலும், வசனங்களிளும் கொடுக்கப்பட்டுள்ளன. வாய்வழி, மூக்கு, தோல் போன்ற பல்வேறு வழிகளில்  சிகிச்சைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

மனநலத்தையும், சித்தமருத்துவத்தையும் இணைத்து சித்த மருத்துவநூல்களில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகளையும், வகைபடுத்தல்களையும், சிகிச்சை முறைகளையும், மூலிகை கூட்டுசேர்க்கைகளையும், இன்றைய நவீன, விஞ்ஞான அறிவியல் துணைகொண்டு பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கவேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

References

  1. Kuppuswamy Mudaliar. C. M. (1954). Siddha maruththuvam, of Tamil Nadu Publications, Madras (in Tamil).

  2. Somasundaram O, Murthy, J., & VijayaRaghavan. (2015). Mental Health: Concepts and Treatment in the Siddha (Tamil) System of Medicine, ASEAN Journal of Psychiatry, Vol. 16 (2).

  3. Somasundaram O, Jayaramakrishnan T, Suresh Kumar M. (1986). Psychiatry in Siddha (Tamil) system of Medicine. Indian Journal of Psychological Medicine, 9:38-45.

  4. Kuppusamy Mudaliar C.N. (1954). Siddha Maruthuvam.

  5. Anandan, T. (1983). Siddha Medicine on Mental Diseases. Heritage of Tamils: Siddha Medicine, 198-216.

 

……………………………………………………………………………………………………………………………………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *